கர்நாடகத்தில் நிலவி வரும் முதல்வர் மாற்ற விவகாரம் குறித்து மௌனம் கலைத்துள்ள முதல்வர் சித்தராமையாவின் மகனும், காங்கிரஸ் மேலவை உறுப்பினருமான யதீந்திரா சித்தராமையா, மாநிலத்தில் தலைமை மாற்றத்திற்கான வாய்ப்பே இல்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் மேலிடம் தங்களுக்கு மிகத் தெளிவான சிக்னல் கொடுத்துவிட்டதாகவும், தற்போதுள்ள முதல்வர் மாற்றத்திற்கான எந்தவொரு கோரிக்கையையும் மேலிடம் ஏற்கவில்லை என்றும் கூறினார். மேலும், முதல்வர் மாற்றம் குறித்த செய்திகள் ஊடகங்களில் மட்டுமே விவாதிக்கப்படுவதாகவும், அரசியல் வட்டாரத்தில் அது ஒரு முடிந்துபோன விவகாரம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் சித்தராமையா தனது முழு ஐந்து ஆண்டு காலத்தையும் முதல்வராக நிறைவு செய்வார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள யதீந்திரா, கட்சியில் தகுதியான பல தலைவர்கள் இருந்தாலும் தலைமை மாற்றம் குறித்து டெல்லி மேலிடம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதை நினைவுபடுத்தினார். அதே நேரத்தில், யதீந்திராவின் இந்தக் கருத்துக்குத் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கிண்டலாகப் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் யதீந்திராவே தங்களுக்கு மேலிடம் போன்றவர் என்றும், அவர் சொல்வதை மரியாதையுடன் ஏற்பதாகவும் சிவகுமார் விமர்சித்துள்ளார். முதல்வர் பதவி தொடர்பான அதிகாரப் பகிர்வு குறித்து அவ்வப்போது கருத்துக்கள் எழுந்து வரும் நிலையில், யதீந்திராவின் இந்த விளக்கம் கர்நாடக அரசியலில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.