பெங்களூருவில் ஆட்டோ பயணி ஒருவர் தான் வெட்டிய நகங்களை இருக்கையிலேயே விட்டுச் சென்றதற்காக, ஆட்டோ ஓட்டுநர் அவரை அழைத்து சுத்தம் செய்யச் சொன்ன வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான பெங்களூரு போக்குவரத்தில் நேரமின்மை காரணமாகப் பயணிகள் பயணத்தின் போதே நகம் வெட்டுவது, உணவு உண்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், இந்த ஓட்டுநர் பயணி இறங்கியதும் இருக்கையைச் சோதித்து, சிதறிக் கிடந்த நகங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அந்தப் பயணியைத் திரும்ப அழைத்துச் சுத்தம் செய்ய வைத்தார். இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய ஓட்டுநர், “குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயணிக்கும் ஆட்டோவை நான் தினமும் சுத்தமாக வைத்திருக்கிறேன், பயணிகள் பொது அறிவோடு நடந்துகொள்ள வேண்டும்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் இதற்குப் பலதரப்பட்ட கருத்துகள் எழுந்துள்ளன; சிலர் ஓட்டுநரின் செயலை ஆதரித்தாலும், ஒரு சிலர் ஓட்டுநர் இன்னும் கனிவாகச் சொல்லியிருக்கலாம் என விமர்சித்துள்ளனர். நகம் வெட்டுவதை லட்சுமிக்கு அவமரியாதை என்று கூறி ஓட்டுநருக்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.