பஞ்சாப் மாநிலத்தில் சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ரமண்தீப் கவுர் (30) என்ற அங்கன்வாடி ஊழியர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். ரமண்தீப்பிற்கும் 20 வயதான கரந்தீப் சிங் என்பவருக்கும் இடையே சமூக வலைதளத்தில் நட்பு ஏற்பட்டுள்ளது.

காலப்போக்கில் அவனது நடத்தை பிடிக்காததால் ரமண்தீப் அவனது எண்ணைத் தடை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கரந்தீப், சுமார் 231 கிலோமீட்டர் பயணம் செய்து அவர் வேலை பார்க்கும் அங்கன்வாடி மையத்திற்கே சென்று, பேப்பர் கட்டரால் அவரது கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

இந்தக் கொலைக்குப் பிறகு தப்பி ஓட முயன்ற கரந்தீப்பின் கைகளில் இரத்தம் இருப்பதைக் கண்ட வாகன ஓட்டுநர் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் கொடுத்த தகவலின் பேரிலும், சிசிடிவி காட்சிகளின் உதவியுடனும் போலீசார் கொலையாளியைக் கைது செய்தனர். 2017-ல் திருமணமான ரமண்தீப்பிற்கு இரண்டு சிறு குழந்தைகள் உள்ளனர்.

ஒருதலைக் காதலால் ஏற்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.