ஹைதராபாத் எல்.பி.நகர் பகுதியில் உள்ள ஒரு  தனியார் மருத்துவமனையில், சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் யாரும் எதிர்பாராத ஒரு விசித்திரமான வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. லலிதா கரிரா என்ற பெண்மணி கடுமையான வயிற்று வலி என்று கூறி அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றும், அவர் முற்றிலும் நலமாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

பொதுவாக நோய் இல்லை என்று சொன்னால் நிம்மதி அடைய வேண்டியதற்குப் பதிலாக, அந்தப் பெண் திடீரென ஆக்ரோஷமடைந்து அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்களை சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். வார்டில் இருந்த ஊழியர்களைக் கைகளாலும் கால்களாலும் எட்டி உதைத்து, கெட்ட வார்த்தைகளால் திட்டி அவர் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் அந்தப் பெண் அங்கிருந்து கிளம்பி, சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டார். மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ புகாரின் பேரில் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், தாக்குதல் நடத்திய லலிதா கரிரா அந்த மருத்துவமனை உரிமையாளர்களின் பிசினஸ் பார்ட்னர் என்று சொல்லப்படுவதால், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஏதேனும் பெரிய சதித்திட்டம் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வினோத மோதலுக்கான உண்மையான காரணம் என்ன என்பது போலீஸ் விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.