ஆஸ்திரேலியாவில் கைநிறைய சம்பளத்துடன் சொகுசாக வாழ்ந்த வாழ்க்கையை உதறிவிட்டு, தாய்நாட்டின் மண்ணை நம்பி இறங்கிய அம்ரித் சிங் புட்டர் – ரமந்தீப் கவுர் தம்பதியின் இந்த வெற்றிக்கதை, இன்றைய இளைஞர்களுக்கு ஒரு செம நல்ல பாடம். ஆரம்பத்தில் ₹5 கோடி முதலீட்டில் 130 எருமைகளுடன் தொடங்கப்பட்ட இந்த நவீன டெய்ரி ஃபார்ம், இன்று ஒரு பிரம்மாண்ட பிசினஸ் சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ளது. 25 ஏக்கர் நிலத்தில் எருமைகளுக்கான தீவனத்தை இவர்களே சொந்தமாக விவசாயம் செய்து தயாரித்துக் கொள்வதால், உற்பத்தி செலவு பாதியாகக் குறைந்துள்ளது.
தற்போது நாளொன்றுக்கு 500 முதல் 600 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில், அதில் பாதியை ‘வெர்கா’ நிறுவனத்திற்கும், மீதியைத் தங்களுக்கு என்று இருக்கும் பிரத்யேக வாடிக்கையாளர்களுக்கும் நேரடியாக விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் மாதம் ₹11 லட்சம் முதல் ₹12 லட்சம் வரை பால் விற்பனை நடப்பதுடன், அனைத்துச் செலவுகளும் போக மாதம் ₹6 லட்சம் முதல் ₹7 லட்சம் வரை தம்பதியருக்கு லாபமாகக் கிடைக்கிறது.
வெறும் பால் விற்பனையோடு நின்றுவிடாமல் எருமை வளர்ப்பு, மாடுகளுக்கான பிரத்யேக தீவனத் தயாரிப்பு, ஆடு வளர்ப்பு மற்றும் புதிய தொழில் தொடங்குபவர்களுக்கான கன்சல்டிங் (ஆலோசனை) எனப் பல வழிகளில் தங்களது வருமானத்தை மல்டிப்ளை செய்துள்ளனர் இந்த தம்பதியர். சுற்றுச்சூழல் அறிவியலில் (Environmental Science) முதுகலை பட்டம் பெற்ற மனைவி ரமந்தீப், ஆஸ்திரேலியாவிலிருந்து கணவருக்காக இந்தியா திரும்பி, இன்று ஃபார்மின் ஆடு வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கப் பிரிவை மிக நேர்த்தியாக நிர்வகித்து வருகிறார்.
இவர்களது இந்த நவீன பண்ணை மூலம் 3 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. தற்போது 130 ஆக இருக்கும் எருமைகளின் எண்ணிக்கையை விரைவில் 1,000 ஆக உயர்த்தி, இந்தியாவின் டாப் ஸ்டார்ட்-அப்பாக மாற்ற வேண்டும் என்ற வெறியோடு உழைத்து வரும் புட்டர் தம்பதியின் கதை, ‘விவசாயத்தை முறையா செஞ்சா கோடிகளில் புரளலாம்’ என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது.
