ஈரான் மீதான மின் உற்பத்தி நிலையத் தாக்குதலை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாகவும், அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், இந்த அறிவிப்பை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளது.
அமெரிக்காவுடன் நேரடி அல்லது மறைமுகப் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றும், டிரம்ப் தனது தோல்வியை மறைக்கவும் கால அவகாசம் பெறவுமே இத்தகைய ‘உளவியல் போர்’ தந்திரத்தைக் கையாளுவதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியாமல், தங்கள் நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் அழுத்தம் மற்றும் பொருளாதாரச் சந்தையில் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டே டிரம்ப் தனது முடிவை மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை ஈரான் தாக்கப்பட்டால், பதிலுக்கு அவர்கள் ஒட்டுமொத்த மேற்கு ஆசியாவின் மின் கட்டமைப்புகளையும் குறிவைப்பார்கள் என்ற அச்சம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளதாக ஈரானிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தத்திற்கான வழியை டிரம்ப் தேடினாலும், தற்காப்புக்காகப் போரைத் தொடர ஈரான் உறுதியாக உள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் எரிசக்தி சந்தையில் நிலவும் பதற்றம் இன்னும் குறையாத நிலையில், அடுத்த ஐந்து நாட்கள் உலக நாடுகளுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
