ஈரோடு மாவட்டத்தில் உள்ள சமனா காட்டுத் தோட்டம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராமசாமி வளர்த்த மாடு கன்று குட்டி ஈன்றது. இதனால் பசுமாட்டுடன் கன்று குட்டியை தனது தோட்டத்தில் கட்டி வைத்துவிட்டு நேற்று முன்தினம் ராமசாமி தூங்க சென்றார். இதனையடுத்து திடீரென கன்றுக்குட்டியின் சத்தம் கேட்டதால் ராமசாமி வெளியே வந்து பார்த்தார். அப்போது கன்று குட்டி அங்கு இல்லை.

மேலும் தோட்டத்தில் சிறுத்தை புலியின் கால் தடங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் தோட்டத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டி தேடினர். அப்போது சோளக்காட்டில் கன்றுக்குட்டியின் உடல் கடித்து குதறப்பட்ட நிலையில் கிடந்தது. ஏற்கனவே சிறுத்தை புலி நஞ்சப்பன் என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்து ஆட்டுக்குட்டியை கடித்து கொன்றது. சிறுத்தை புலியின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.