மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில், புதைக்கப்பட்ட 3 வயது சிறுமியின் உடல் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்த தனது மகள் ஸ்ரீஜனியின் சமாதிக்கு, தந்தை ஷியாமல் அவ்வப்போது பூக்கள் மற்றும் சாக்லேட்டுகளை வைத்து அஞ்சலி செலுத்தி வந்துள்ளார்.
ஏப்ரல் 3-ம் தேதி அவர் வழக்கம்போல சமாதிக்குச் சென்றபோது, அது உடைக்கப்பட்டு குழி தோண்டப்பட்டிருப்பதைக் கண்டு உறைந்து போனார். உள்ளே இருந்த சிறுமியின் உடல் திருடப்பட்டிருந்ததுடன், உடலைப் போர்த்தியிருந்த துணி மட்டும் அருகில் வீசப்பட்டிருந்தது.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சுடுகாட்டு ஊழியர்களின் கவனக்குறைவே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டும் அவர்கள், தங்களுக்கு நீதி வேண்டும் என்று கண்ணீருடன் போராடி வருகின்றனர்.
ஆனால், தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளால் விசாரணை தாமதமாவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் மாயமான இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
