ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், 45 வயதான ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனோஜ் குமார் சர்மா என்பவர் தனது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தில் பணியாற்றிவிட்டு மின்சாரத் துறையில் எழுத்தாளராகப் பணியாற்றி வந்த மனோஜுக்கும், அவரது மனைவி தீபிகாவுக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தீபிகாவுக்கும் தேவேஷ் என்பவருக்கும் இடையே இருந்த கள்ளக்காதல் விவகாரமே இந்தக் கொலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு, மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் தேவேஷ் மற்றும் அவரது நண்பர் விஷ்ணு ஆகியோர் சேர்ந்து மனோஜைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். இந்தக் கொடூரத்தைச் செய்த கையோடு, யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க மனோஜின் உடலை அவசர அவசரமாகத் தகனம் செய்யத் தீபிகா முயன்றுள்ளார். ஆனால், அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் மனோஜின் பெற்றோர் ஓடிவந்து இறுதிச்சடங்கைத் தடுத்து நிறுத்தினர்.
போலீசார் நடத்திய சோதனையில் மனோஜின் கழுத்தில் காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது தீபிகா மற்றும் விஷ்ணு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர், தப்பியோடிய கள்ளக்காதலன் தேவேஷைத் தேடி வருகின்றனர். தந்தையைக் கொன்றபோது அவரது இரண்டு குழந்தைகளும் மேல் அறையில் தூங்கிக்கொண்டிருந்தது மனதை உலுக்கும் விதமாக அமைந்துள்ளது.
