மரண பயம் ஒவ்வொரு நொடியும் துரத்திய போதிலும், அதையே தனது பலமாக மாற்றி இன்று உலகப்புகழ் பெற்ற இதய நோய் நிபுணராகத் திகழ்கிறார் 45 வயதான ஏஞ்சலிகி அசிமாகி. இவரது வாழ்க்கை ஒரு திகில் திரைப்படத்தை விடவும் சவால்கள் நிறைந்தது. அதாவது ஏஞ்சலிகிக்கு 15 வயதாக இருந்தபோது அடிக்கடி மயக்கம் ஏற்பட்டது. பரிசோதனையில், அவரது இதயம் ஒவ்வொரு முறையும் 14 விநாடிகள் முழுமையாகத் துடிப்பதை நிறுத்துவது கண்டறியப்பட்டது. சில நிமிடங்களுக்கு ஒருமுறை மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பிய அவருக்கு, அந்தச் சிறிய வயதிலேயே இதயத் துடிப்பைச் சீராக்கும் ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டது.

சவால்கள் அங்கோடு முடியவில்லை. 26 வயதில் விமானப் பயணத்தின் போது அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு, வலது பக்க உடல் செயலிழந்தது. 29 வயதில் பேஸ்மேக்கர் பேட்டரியை மாற்ற முற்பட்டபோது, அவரது இதயத்தில் ஒரு பெரிய துளை இருப்பது 10 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்டது. இதற்காக அவருக்கு ‘ஓபன் ஹார்ட்’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 9 முறை அவர் இதய அறுவை சிகிச்சைகளை எதிர்கொண்டுள்ளார்.

தனது வலிகளையே உந்துசக்தியாக மாற்றிய ஏஞ்சலிகி, இதய நோய்களுக்கான ஆராய்ச்சியாளராக மாறினார். தற்போது லண்டன் ‘சிட்டி சென்ட் ஜார்ஜ் பல்கலைக்கழகத்தில்’ இதய ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராக உள்ளார். முன்னர் இதய நோய்களைக் கண்டறிய இதயத்தின் திசுவை வெட்டியெடுக்கும் (Biopsy) ஆபத்தான முறை நடைமுறையில் இருந்தது. ஆனால், ஏஞ்சலிகி கன்னத்தின் உட்புறத்தில் உள்ள உமிழ்நீர் மாதிரியை வைத்தே இதய நோய்களைக் கண்டறியும் எளிய மற்றும் பாதுகாப்பான முறையைக் கண்டுபிடித்து மருத்துவ உலகில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இயந்திரத்தின் உதவியுடன் வாழ்ந்தாலும், ஏஞ்சலிகி இரண்டு ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். “மரணத்தின் நிழலில் வாழ்ந்தாலும் ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்பதற்கு நானே உதாரணம்” எனக் கூறும் அவர், தற்போது இதய நோயாளிகளுக்காக நிதி திரட்ட 45 கிலோமீட்டர் நடைப்பயண சவாலையும் மேற்கொண்டு வருகிறார்.

மேலும் “எனது நோயாளிகளைச் சந்திக்கும்போது, நானும் உங்களைப் போல ஒரு இயந்திரத்தின் துணையோடுதான் வாழ்கிறேன் என்று பெருமையுடன் கூறுவேன். அது அவர்களுக்குப் பெரும் நம்பிக்கையைத் தருகிறது,” என ஏஞ்சலிகி நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.