பொதுவாக சிறுத்தைகள் மட்டுமே மரத்தில் ஏறி வேட்டையாடும் திறன் கொண்டவை. புலிகள் தரையில் இருந்து வேட்டையாடுவதையே வழக்கமாகக் கொண்டவை. ஆனால், அண்மையில் சமூக வலைதளங்களில் புலி ஒன்று லாவகமாக மரம் ஏறும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

வெளியாகியுள்ள வீடியோவில், நபர் ஒருவர் ஒரு கயிற்றில் இறைச்சித் துண்டைக் கட்டி புலிக்கு ஆசை காட்டுகிறார். அந்த இறைச்சியைப் பார்த்தவுடன் புலி அதை நோக்கி ஓடி வருகிறது. உடனே அந்த நபர் இறைச்சியை மரத்தின் மேல் இழுக்க, பசியில் இருந்த புலி சற்றும் யோசிக்காமல் மின்னல் வேகத்தில் மரத்தின் உச்சிக்கு ஏறிச் சென்று அந்த இறைச்சியைப் பிடித்து உண்கிறது. பின்னர் மிகவும் நிதானமாக மரத்திலிருந்து கீழே இறங்குகிறது.

இயற்கையிலேயே புலிகள் மரம் ஏறுவது மிகவும் அரிதான ஒன்று என்பதால், இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இது உண்மையா அல்லது கிராபிக்ஸ் காட்சியா என்று வியப்படைந்துள்ளனர்.  இந்தச் சம்பவம் குறித்துத் தேடியபோது, இது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.  புலி ஏறியது நிஜமான மரம் அல்ல. அது மரம் போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட ஒரு செயற்கைக் கம்பம்  ஆகும்.

உயிரியல் பூங்காவில் உள்ள புலிகளின் இயற்கையான வேட்டைத் திறனை ஊக்குவிக்கவும், பார்வையாளர்களுக்கு அவற்றின் உடல் வலிமையைக் காட்டவும் பூங்கா ஊழியர்கள் இது போன்ற பயிற்சிகளை வழங்குகின்றனர். இது போன்ற பயிற்சிகள் புலிகளின் உடல் ஆரோக்கியத்தைப் பேணவும், அவை சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றன என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது ஆயிரக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் குவித்து வருகிறது. “புலிகளால் இவ்வளவு உயரமாக ஏற முடியுமா?” என நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.