மதுப்பழக்கம் ஒரு மனிதனின் வாழ்க்கையையும் உடல் நலத்தையும் எந்த அளவிற்குச் சீரழிக்கும் என்பதற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஷான் ஹாலந்தின் வாழ்க்கையே ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. அதாவது ஷான், தனது 18 வயதில் மது அருந்தத் தொடங்கினார். ஆரம்பத்தில் பதற்றத்தைக் குறைக்க உதவும் என்று நினைத்த இந்தப் பழக்கம், நாளடைவில் அவரைக் முழுமையாக அடிமையாக்கியது.
21 வயதை எட்டியபோது, காலை உணவாகவே ‘வோட்கா’ மதுவை அருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஒரு நாளைக்குச் சுமார் 6 பாட்டில் ஒயின் பாட்டில்களைக் குடித்துத் தீர்த்த அவர், இதற்காகத் தினசரி 6,000 ரூபாய் வரை செலவழித்துள்ளார். மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்காக மூன்று முறை சிறை சென்ற ஷான், கடந்த 2025 மார்ச் மாதம் தனது பிறந்தநாளில் இந்தப் பழக்கத்தை விட முடிவு செய்தார். ஆனால், திடீரென மதுவை நிறுத்தியபோது அவரது உடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
பரிசோதனையில் அவரது கல்லீரல் (Liver) மற்றும் சிறுநீரகம் (Kidney) ஆகியவை மோசமாகப் பாதிப்படைந்தது கண்டறியப்பட்டது. உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியதால், அவரது தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறின. சுமார் 3 மாதங்கள் இதே நிலையில் அவர் மரணப் போராட்டத்தை எதிர்கொண்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, இரண்டு மாதங்கள் மறுவாழ்வு மையத்தில் (Rehab) தங்கிச் சிகிச்சை பெற்றார். கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்பு நிரந்தரமானது என்றாலும், தற்போது கடந்த 11 மாதங்களாக ஒரு சொட்டு மதுகூட அருந்தாமல் ஷான் உறுதியாக உள்ளார். மேலும் தற்போது மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். “மது என்பது தற்காலிக நிம்மதியைத் தரலாம், ஆனால் அது உங்களை மெல்ல மெல்லக் கொல்லும்” என ஷான் எச்சரிக்கிறார்.
