பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களை உடனே கண்டறியும் வகையில், தொடுதலின் மூலம் நிறம் மாறும் புதிய வகை உறைகளை லண்டனைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்கள் உருவாக்கி அசத்தியுள்ளனர். மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தத் தயாரிப்பு உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
லண்டனின் ‘நியூட்டன் அகாடமி’ பள்ளியைச் சேர்ந்த 14 வயது மாணவர்களான சிராக் ஷா, தான்யல் அலி மற்றும் முவாஸ் நவாஸ் ஆகியோரே இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தவர்கள். இந்த உறையின் மேற்பரப்பில் ஒரு சிறப்பு வேதிப்பொருள் பூசப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட வைரஸ் அல்லது பாக்டீரியாக்களுடன் தொடர்பு கொள்ளும்போது, ஒரு எச்சரிக்கை சிக்னல் போல நிறம் மாறி விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
இந்த உறைகள் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து வெவ்வேறு நிறங்களாக மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன்படி பச்சை நிறம்: கிளாமிடியா (Chlamydia) பாதிப்பு. மஞ்சள் நிறம்: ஹெர்பெஸ் (Herpes) வைரஸ். நீல நிறம்: சிபிலிஸ் (Syphilis) பாதிப்பு. ஊதா நிறம்: மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) போன்றவைகளாகும்.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதலே இந்தத் தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இதனைத் தயாரிப்பதற்கான செலவு மிக அதிகமாக இருப்பதால், இன்னும் வணிக ரீதியாகச் சந்தைக்கு வரவில்லை. மேலும், இந்தப் பூச்சினால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பது குறித்த ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும் பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற இது ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என மருத்துவ வல்லுநர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த இளம் கண்டுபிடிப்பாளர்களுக்குப் பல்வேறு சர்வதேச விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
