வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பு மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, மத்திய அரசின் புதிய விதிகளின்படி “சிம் கார்டு அடிப்படையிலான சரிபார்ப்பு” முறையை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. பொதுவாக, வாட்ஸ்அப் கணக்கை ஒருமுறை தொடங்கிவிட்டால், பிறகு சிம் கார்டை அகற்றினாலும் அல்லது அது செயலிழந்தாலும் அந்தச் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
ஆனால், இனிமேல் மொபைல் போனில் ‘ஆக்டிவ்’ நிலையில் உள்ள சிம் கார்டு இருந்தால் மட்டுமே வாட்ஸ்அப் இயங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. தற்போது இதற்கான சோதனை முயற்சிகள் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும்போது, சிம் கார்டு இல்லாத போன்களில் வாட்ஸ்அப் தானாகவே செயலிழந்துவிடும்.
இதன் மூலம் போலி கணக்குகள் மற்றும் சிம் கார்டு இல்லாமல் சமூக வலைதளங்களை முறைகேடாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது. விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் இந்த சிம் கட்டாயமாக்கல் நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
