கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அருகேயுள்ள எருமனூர் புதிய காலனியில் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் இரவு தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதைப் பார்க்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (25), அவரது தம்பி கவுதமன் (20), மற்றும் நண்பர்களான ஆதினேஷ் (21), அய்யப்பன் (19), வேல்முருகன் (21), நடராஜன் (21) ஆகியோர் டீ குடிக்க காரில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் அருகே உள்ள புறவழிச் சாலைக்கு சென்றனர். காரை வெங்கடேசன் ஓட்டியுள்ளார்.

அந்த பகுதியில் டீக்கடை இல்லாததால், அவர்கள் புறவழிச் சாலை வழியாக சித்தலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கொளஞ்சியப்பர் கோவில் அருகே வந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையின் இடதுபுறம் இருந்த மரத்தில் மோதியதில் தலைக்குப்புற கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது.

அதில் கார் நொறுங்கி உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில் ஆதினேஷ், அய்யப்பன், வேல்முருகன் ஆகிய மூவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த வெங்கடேசன், கவுதமன், நடராஜன் ஆகியோர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த விபத்து குறித்து விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.