சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த பெண், தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன், அவரது மொபைல் போனுக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு வீடியோ வந்தது.
அந்த வீடியோவில், அந்தப் பெண்ணும் அவரது கணவரும் தனிமையில் உடலுறவில் இருந்த காட்சிகள் பதிவாகியிருந்தன. பின்னர், அந்த வீடியோவை அனுப்பிய நபர், அந்த பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் கேட்கும் பணத்தை தர வேண்டும் எனவும், இல்லையெனில் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என மிரட்டினார்.
அதனால் அதிர்ச்சியடைந்த பெண், இதை தனது கணவரிடம் தெரிவித்தார். உடனடியாக, கணவர் கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மிரட்டல் விடுத்தவர் பெரும்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த பிரகாஷ் (27) என்பது தெரியவந்தது. ஆனால், பிரகாஷ் தலைமறைவானதால், அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
பின்னர், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் பதுங்கியிருந்த பிரகாசை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், கணவன்-மனைவி தனியாக இருந்ததை ஒரு பெண் வீடியோ எடுத்து தனக்கு அளித்ததாக பிரகாஷ் தெரிவித்தார்.
அந்தப் பெண் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரகாசை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
