குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் திருமணமான மூன்றே மாதங்களில் தம்பதியர் பரிமாற்ற வலையமைப்பில் ஈடுபடத் தன்னை வற்புறுத்தியதாகக் கூறியுள்ள புகார் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கும், பொழுதுபோக்குக்காகவும் இத்தகைய செயலில் ஈடுபட வேண்டும் என்று கணவர் வற்புறுத்தியதாகவும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால் அவர் தன்னைத் தாக்கியதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் செயல்படும் இந்த வலையமைப்பில், தம்பதிகள் போலி கணக்குகளைத் தொடங்கி, புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டு, பின்னர் நேரிலும் சந்தித்துத் தவறான செயல்களில் ஈடுபடுவதாக அவர் விவரித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அந்தப் பெண், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த வலையமைப்பை நடத்தி வருவதாகவும், இதற்காகப் பல தம்பதிகள் ஒன்றிணைந்து செயல்படுவதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மேலும், இந்தச் செயலுக்குச் சம்மதிக்கும் தம்பதிகளுக்குப் பணம் வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பான சாட்டுகளைத் தன்னிடம் ஆதாரமாக வைத்திருப்பதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி வெளியானவுடன் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்துள்ளது; ஒரு தரப்பினர் இதைத் தனிமனித விருப்பம் என்று கூறினாலும், மற்றொரு தரப்பினர் இது போன்ற செயல்கள் குடும்ப அமைப்பிற்கு எதிரானது என்றும், பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக வற்புறுத்துவது வன்முறை என்றும் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவுமாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.