மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில், திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், இளைஞர் ஒருவரை அவரது வருங்கால மனைவியே கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விஜயராகவ்கர் பகுதியைச் சேர்ந்த 20 வயது சுனில், கடந்த புதன்கிழமை இரவு கம்ாரியா கிராமத்தில் உள்ள தனது வருங்கால மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், மறுநாள் காலை கிராமத்திற்கு வெளியே அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

அவரது உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், சுனிலின் வருங்கால மனைவியிடம் விசாரணை நடத்தியதில் இந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்தது.

விசாரணையில், அன்று இரவு சுனிலின் செல்போனை அந்தப் பெண் பார்த்தபோது, அதில் வேறொரு பெண்ணின் புகைப்படம் இருந்ததைக் கண்டு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அந்தப் பெண், வீட்டில் இருந்த மின்சாரக் கம்பியை எடுத்து சுனிலின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.

குற்றம் செய்த பெண் ஒரு சிறுமி என்பதால், போலீசார் அவரைப் பாதுகாப்பு காவலில் எடுத்து சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். செல்போனில் இருந்த ஒரு புகைப்படத்தால் ஏற்பட்ட தகராறு, ஒரு திருமண வீட்டைப் பிணவறையாக மாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.