தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு திமுகவிற்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதுவரை திமுகவை விட்டால் அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே மாற்று சாய்ஸாக இருந்த நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஒரு புதிய வாய்ப்பாக உருவெடுத்துள்ளது.

விஜய்யின் பட விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்ததும், தவெகவுடன் கூட்டணி அமைத்தால் மீண்டும் அதிகாரத்தைப் பிடிக்கலாம் என காங்கிரஸ் நிர்வாகிகள் விரும்புவதும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், காங்கிரஸ் கட்சி விஜய்யுடன் கைகோர்க்க வேண்டும் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். மற்ற கட்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்ததால் காங்கிரஸின் பலம் குறைந்துவிட்டதாகவும், தங்களுக்குத் தேவையான அதிகாரத்தை வழங்குவதாக விஜய் முன்வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் காங்கிரஸ் மீண்டும் ஒரு புதிய வரலாற்றைப் படைக்க முடியும் என்றும், வரவிருக்கும் தேர்தலில் விஜய்யின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.