தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் பிரமாண்ட மாநாடுகளை நடத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு மாநில அளவிலான மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அவர் தனது தேர்தல் பரப்புரைக் குழுவுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த மாநாட்டைத் தொடர்ந்து, கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பொதுக்கூட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மண்டல வாரியாக வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் தலா ஒரு பொதுக்கூட்டம் என மொத்தம் ஐந்து பெரிய கூட்டங்களை நடத்தி மக்களிடையே ஆதரவைத் திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், விஜய்யின் இந்த அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.