இன்றைய மனிதர்களின் மிகப்பெரிய கவலையாகவும் சுமையாகவும் உருவெடுத்திருப்பது கடன் தொல்லைதான். எவ்வளவு பாடுபட்டுச் சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காமல் விரயமாகி வருவது பலரின் தூக்கத்தைக் கெடுத்து வருகிறது. “இந்தக் கடன் பிரச்சனைக்கு முடிவே இல்லையா?” என்ற மனவேதனை அடைபவர்களுக்குத் தீர்வு தரும் அற்புத ஆன்மீகத் தலமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோவில் விளங்குகிறது. தேவாரப் பாடல் பெற்ற இந்தச் சிவஸ்தலத்தின் மூலவராக வாசீஸ்வரரும், அம்பாளாகத் தங்காதலி அம்மனும் எழுந்தருளியுள்ளனர்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்தப் பகுதியை ஆட்சி செய்த குரும்பன் என்ற சிற்றரசன், சோழ மன்னன் கரிகாலனுக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தை மறுத்தான். இதனால் கோபமடைந்த கரிகாலன் போருக்குச் சென்றபோது, குரும்பனின் குலதெய்வமான காளிதேவி வானில் இருந்து அம்புகளைப் பொழிந்து சோழப் படையைத் தோற்கடித்தாள். அதிர்ச்சியடைந்த கரிகாலன் சிவபெருமானை வேண்ட, ஈசன் தனது வாகனமான நந்தியை அனுப்பி காளியைச் சங்கிலியால் பிணைத்துத் தடுத்து நிறுத்தி, கரிகாலனை வெற்றி பெறச் செய்தார்போர் வெற்றிக்குப் பிறகு, அப்பகுதியில் இருந்த அடர்ந்த மூங்கில் காட்டிற்குள் பசு ஒன்று தினமும் சென்று வழிவிடும் அதிசயத்தைக் கரிகாலன் கேள்வியுற்றான்.

உடனே மூங்கில் புதர்களை அரிவாளால் வெட்டி அகற்ற முற்பட்டபோது, திடீரென ஒரு இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. பதறிய மன்னன் தோண்டிப் பார்த்தபோது அங்குச் சிவலிங்கம் இருந்தது. தனது அறியாமையால் செய்த தவறை எண்ணிக் கதறிய மன்னன், அதே இடத்தில் ஈசனுக்கு அழகிய ஆலயத்தைக் எழுப்பினான். அரிவாளின் ‘வாசி’ பட்டதால் இத்தல இறைவன் ‘வாசீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

காலங்கள் கடந்த பிறகு, திருப்பதி வெங்கடேசப் பெருமாள் தனது திருமணத்திற்காகக் குபேரனிடம் பெற்ற கடனை அடைக்க முடியாமல் வருந்தி சிவபெருமானை சரணடைந்தார். அதற்கு ஈசன், “திருப்பாச்சூரில் எழுந்தருளியிருக்கும் வலம்புரி விநாயகரை வழிபடு” என்று வழிகாட்டினார். அதன்படி பெருமாள் இத்தலத்திற்கு வந்து 11 தேங்காய் மாலைகள், 11 வாழைப்பழ மாலைகள், 11 அருகம்புல் மாலைகள் சாற்றி, 11 நெய் தீபங்கள் ஏற்றி வலம்புரி விநாயகரை வழிபட்டனர். இந்த வழிபாட்டிற்குப் பின் மூன்று மாதங்களிலேயே பெருமாளுக்கு இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைத்துக் கடன் சுமை நீங்கியது.

இன்றும் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வியாபாரத்தில் நஷ்டத்தைச் சந்திப்பவர்கள் மற்றும் நிதி நெருக்கடியில் இருப்பவர்கள் சென்னைக்கு அருகிலுள்ள திருப்பாசூர் வாசீஸ்வரர் மற்றும் வலம்புரி விநாயகரை மனமார வழிபட, கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கையாகும்.