வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் இந்தியப் பயணிகளுக்கு உதவும் வகையில், 2026-ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கான விசா விதிமுறைகளில் மாற்றம் மற்றும் தளர்வுகளைச் செய்துள்ள முக்கிய நாடுகளின் விவரங்கள் குறித்து பார்ப்போம். அதன்படி மலேசியா, இந்தியப் பயணிகளுக்கு வழங்கி வரும் 30 நாட்கள் வரை விசா தேவையில்லாத சலுகையை 2026 டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.
இதனால் இந்தியர்கள் எவ்வித சிரமமும் இன்றி இணைய வழியில் வருகைப் படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து மலேசியாவிற்குச் சுற்றுலா சென்று வர முடியும். அதேபோல, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகள் இந்தியர்களுக்கான விமான நிலைய டிரான்ஸிட் விசா விதிகளில் தளர்வு அளித்துள்ளன. இதன் மூலம், மற்ற நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது பிரான்ஸ் அல்லது ஜெர்மனி விமான நிலையங்கள் வழியாக மாற்று விமானம் ஏறிச் செல்லும் இந்தியப் பயணிகளுக்கு இனி பிரத்யேக டிரான்ஸிட் விசா தேவையில்லை.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவும் இந்தியர்களுக்குப் புதிய விசா தளர்வை அறிவித்துள்ளது. செல்லுபடியாகும் அமெரிக்க விசா (B1/B2, H-1B போன்ற வகைகள்) அல்லது அமெரிக்க கிரீன் கார்டு வைத்துள்ள இந்தியர்கள், அர்ஜென்டினாவிற்கு விசா இல்லாமலேயே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், நிகரகுவா மற்றும் ஈரான் போன்ற சில நாடுகள் இந்தியர்களுக்கான வருகைக்கால விசா மற்றும் விசா விலக்குச் சலுகைகளை ரத்து செய்து, முன்அனுமதி விசாவை கட்டாயமாக்கியுள்ளன. எனவே, வெளிநாட்டுப் பயணங்களைத் திட்டமிடும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளின் தற்போதைய விசா விதிகளைச் சரிபார்த்துப் பயணிப்பது அவசியமாகும்.
