திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகப் போவதாக கடந்த சில நாட்களாகப் பரவி வந்த வதந்திகளுக்கு, இன்று நடந்த முக்கியச் சந்திப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினை, காங்கிரஸ் தலைவர்கள் செல்வப்பெருந்தகை மற்றும் ப. சிதம்பரம் ஆகியோர் நேரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, திமுக – காங்கிரஸ் கூட்டணி மிகவும் உறுதியாக இருப்பதாகவும், பிரிவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் திமுக தங்களுக்கு எந்தக் கெடுவும் (Deadline) விதிக்கவில்லை என்றும், பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடந்து வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இதன் மூலம் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கிளம்பிய தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகளே என்பது உறுதியாகியுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி எண்ணிக்கை தொடர்பாக இருந்த இழுபறிகள் இந்த ஒரு மணி நேர ஆலோசனையில் ஓரளவுக்குக் குறைந்திருப்பதாகத் தெரிகிறது.
