தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களாக கட்சியின் நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையில், ஒரேயொரு தொகுதியை மட்டும் பெற்றுக்கொண்டு தேர்தலைச் சந்திப்பது சரியாக இருக்காது என்பதே பெரும்பான்மையானவர்களின் கருத்தாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனால், திமுக தலைமை தங்களுக்கு உரிய மரியாதையையும், கூடுதல் இடங்களையும் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைய வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்த வேல்முருகன், தற்போது வரை திமுக கூட்டணியிலேயே நீடிப்பதாகக் கூறினார்.
வடமாவட்டங்களில் பாமக மற்றும் விஜய் போன்றவர்களின் தாக்கம் இருக்கும் சூழலில், ஒரு முக்கிய சமூகத்தின் பிரதிநிதியாகவும், தமிழ் தேசிய அரசியலைப் பேசும் கட்சியாகவும் தவாக இருப்பதால், தங்கள் பலத்தை திமுக உணர வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை திமுக கூடுதல் தொகுதிகளை வழங்க மறுத்தால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க ஒரு வாரத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
“முதலமைச்சர் ஸ்டாலின் எங்கள் கோரிக்கையைப் பரிசீலிப்பார் என்று நம்புகிறோம்; இல்லையெனில் தொண்டர்களின் விருப்பப்படி பொதுக்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று அவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
