தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், திமுக மற்றும் அதன் கூட்டணி வியூகங்களை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். வரும் தேர்தல் ஒரு சாதாரணத் தேர்தலாக இருக்காது என்றும், அது ஒரு ‘மாபெரும் மக்கள் புரட்சியாக’ அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். நிர்வாகிகளிடையே உரையாற்றிய விஜய், திமுக தலைவர் ஸ்டாலினின் கூட்டணி அணுகுமுறையை விமர்சித்தார்.

அவர் பேசியதாவது:”இன்றைய சூழலில், திமுக அலுவலகமான அறிவாலயம் பக்கம் யார் நடந்து போனாலும் சரி, அல்லது வெயிலுக்காக அதன் நிழலில் யார் ஒதுங்கினாலும் சரி, அவர்களை உடனடியாகத் தனது கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறார் ஸ்டாலின் சார். இப்படி ஒரு மெகா கூட்டணியை அவர் உருவாக்கி வருகிறார்.”

திமுக அரசு மீது ஊழல் புகார்களை முன்வைத்த விஜய், “ஆட்சியில் இருக்கும்போது கொள்ளையடித்துச் சேர்த்த பணத்தில் ஒரு பங்கை வாரி இறைத்து, ‘கல்லாப்பெட்டி கூட்டணியை’ அவர் கஷ்டப்பட்டுச் சேர்த்துள்ளார். ஆனால், பழைய கூட்டணிக் கணக்குகளையும், கொள்ளையடித்தப் பணத்தையும் வைத்து மக்களை ஏமாற்றி மீண்டும் வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர் நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது,” எனச் சாடினார்.

வரவிருக்கும் தேர்தலின் முக்கியத்துவத்தை விளக்கிய அவர், “இந்தத் தேர்தல் வழக்கம் போல நடக்கும் ஒன்று கிடையாது. இது மாபெரும் மக்கள் சக்தியின் எழுச்சி; ஒரு வித்தியாசமான ‘விசில் புரட்சி’. உங்களோடு நான் இருக்கிறேன், நம்மோடு மக்கள் இருக்கிறார்கள். இதைத் தவிர நமக்கு வேறு என்ன வேண்டும்?” என்று நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் இறுதியாகத் தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசிய விஜய், “அனைவரும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். நல்லதே நடக்கும், வெற்றி நமதே நிச்சயம். மீண்டும் சந்திப்போம்,” என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.