‘மாயாவி’ படப் புகழ் நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை சூர்ய நாராயணன், கொடைக்கானலில் உள்ள அவரது பங்களாவில் மர்மக் கும்பலால் கை, கால்கள் கட்டப்பட்டு மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். பழைய பகை காரணமாக இந்தத் துணிகரச் சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த சூர்ய நாராயணன், கொடைக்கானலில் சொந்தமாகத் தங்கும் விடுதியுடன் கூடிய பங்களா வைத்துள்ளார். இவரது மகள் நடிகை விஷ்ணு பிரியா. கடந்த 2018-ம் ஆண்டு, விஷ்ணு பிரியாவின் கணவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காகக் குடும்பத்தினர் கொடைக்கானலில் தங்கியிருந்தபோது, கார் டிரைவர் பிரபாகரன் என்பவருடன் விஷ்ணு பிரியாவுக்குத் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தந்தை சூர்ய நாராயணன் கண்டித்தும் பலன் இல்லை. இந்த நிலையில், டிரைவர் பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் கூலிப்படையை ஏவி பிரபாகரனைக் கொன்றதாக சூர்ய நாராயணன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு, சூர்ய நாராயணனின் பங்களாவிலிருந்து “காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…” என்ற அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், பூட்டப்பட்டிருந்த பங்களாவின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு ஒரு அறையில் ஊழியர்கள் ஆறுமுகம் மற்றும் முரளி ஆகியோர் கட்டிப் போடப்பட்டிருந்தனர். மற்றொரு அறையில், நாற்காலியில் அமரவைக்கப்பட்ட நிலையில், சூர்ய நாராயணனின் உடல் முழுவதும் பிளாஸ்டிக் டேப் (Tape) சுற்றப்பட்டு, மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரைச் சேர்ந்த 5 பேர் எந்தவித அடையாளச் சான்றுகளும் இன்றி அந்த விடுதியில் தங்கியுள்ளனர். சூர்ய நாராயணனைக் கொன்ற பின், விடுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை அந்த கும்பல் திருடிச் சென்றுள்ளது. மேலும், அங்கிருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தாலும், டிரைவர் பிரபாகரன் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் பலமாகச் சந்தேகிக்கின்றனர். சூர்ய நாராயணனின் உடல் உடற்கூறாய்வுக்காகக் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நடிகையின் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.