தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், வேலூரில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். இந்தச் சந்திப்பின்போது தொண்டர்கள் ஏந்தி வந்த வித்தியாசமான பதாகைகள் மற்றும் புகைப்படங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

வேலூரில் நடைபெற்ற தவெக கூட்டத்திற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வருகை தந்திருந்தனர். முன்னெப்போதும் இல்லாத வகையில், தங்கள் தலைவரை வரவேற்கத் தொண்டர்கள் புதுமையான முறையில் பதாகைகளைத் தயாரித்து வந்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் தவெக தொண்டர் ஒருவர் ஏந்தி வந்த பதாகையில், தலைவர் விஜய் தலையில் குல்லா அணிந்தும், கையில் முருகப் பெருமானின் ‘வேல்’ ஏந்தியும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

மற்றொரு தொண்டர் வைத்திருந்த பதாகையில் முகமது ஜோசப் விஜய்  என மூன்று மதங்களைச் சார்ந்த பெயர்களுடனும், அதற்குரிய அடையாளங்களுடனும் விஜய் இருக்கும் படம் இடம்பெற்றிருந்தது. எல்லோருக்கும் எல்லாம்” என்ற கொள்கை அடிப்படையில், சாதி மதங்களைக் கடந்து அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் விதமாக இந்தப் புகைப்படங்கள் அமைந்துள்ளதாகக் கட்சி நிர்வாகிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

அரசியல் களத்தில் மத அடையாளங்களை வைத்து விவாதங்கள் முன்னெடுக்கப்படும் சூழலில், விஜய்யின் இந்தப் புதிய பரிமாணப் புகைப்படங்கள் ‘மதநல்லிணக்கத்தின் அடையாளம்’ என அவரது ஆதரவாளர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வேலூர் சந்திப்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்த மாவட்டங்களில் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தலைவர் விஜய் விரிவான ஆலோசனைகளை வழங்க உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.