வேலூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நோக்கித் தலைவர் விஜய் சரமாரியான கேள்விகளை எழுப்பினார். இதற்கு திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுத்துள்ளார். கூட்டத்தில் பேசிய விஜய், கரூர் சம்பவத்தை முன்வைத்து முதலமைச்சரை நேரடியாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:
“முதலமைச்சர் அவர்கள் ‘எனக்கு எதிரிகளே இல்லை, அனைவரும் நண்பர்கள்’ என்று கூறுகிறார். அப்படிப் பார்த்தால் எனக்கும் ஒரு புதிய நண்பர் கிடைத்துள்ளார், அவர்தான் முதலமைச்சர். நண்பர்கள் என்றால், கரூர் விவகாரத்தில் ஏன் என் மீது பழி போட்டீர்கள்? உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அப்படிப் பேசியிருப்பீர்களா?
நாங்கள் எல்லாம் உங்கள் நண்பர்கள் என்றால், ஒரு கட்சி நிகழ்ச்சி நடத்துவதற்கு உரிய அனுமதியோ அல்லது இடமோ வழங்க ஏன் மறுக்கிறீர்கள்? அனைத்தையும் நீங்களே தடுத்துவிட்டு, போற போக்கில் எதையாவது பேசிவிட்டுச் செல்கிறீர்களா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். விஜய்யின் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், விஜய்யின் நிர்வாகத் திறமையைக் கடுமையாகச் சாடினார். அவர் கூறியதாவது:
“முதலமைச்சர் அவரைத் தனிப்பட்ட முறையில் குற்றம் சொல்லவில்லை. ஆனால் விஜய் பேசுவதைப் பார்த்தால் யார் வேண்டுமானாலும் அவர் மீது பழி போடுவார்கள். ஒருமுறை நண்பகல் 12 மணிக்கே வந்து உரையாற்றுவேன் என்று கூறிவிட்டு, கொளுத்தும் வெயிலில் தண்ணீர், உணவின்றித் தொண்டர்களை இரவு 7:30 மணி வரை காத்திருக்க வைத்தார். அந்தச் சூழலில் மக்கள் உயிரிழந்ததற்கு யார் காரணம்?
12:30 மணிக்கு வருவதாகக் கூறிவிட்டு ஏன் 7:30 மணிக்கு வந்தார்? அவர் அன்று குடித்திருந்தாரா? அதை நான் கேட்க விரும்பவில்லை. ஆனால் அத்தனை மணி நேரம் தாமதத்திற்கு அவர் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. மேலும் விஜயின் ரிமோட் பேட்டரி சரியாக வேலை செய்ய வில்லை என்றும் அவர் பாஜகவின் அடிமை என்று விமர்சித்ததோடு பதவி ஆசையால் தான் முதலமைச்சரை விமர்சிக்கிறார் என்றும் கூறினார்.
