தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து விசிக எந்த நேரத்திலும் வெளியேறலாம் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தையே அதிரவைத்துள்ளது. இதுகுறித்து அவர் ஓப்பனாகப் பேசுகையில், “தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை வந்தபோது, தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி வந்திடக் கூடாது என்ற ஒரே நல்ல நோக்கத்திற்காகத்தான் விஜய் ஆட்சி அமைக்க நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தோம்” என்று விளக்கமளித்துள்ளார்.
அதற்குப் பரிசாகத்தான் தவெக அமைச்சரவையில் விசிக-வுக்கு இடம் கிடைத்தது என்றும், கட்சியின் 27 வருட சரித்திரத்தில் முதல்முறையாக வன்னியரசு தற்பொழுது அமைச்சராகியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தவெக அரசுக்குக் குடைச்சல் கொடுக்கும் வகையில் பேசிய திருமாவளவன், “அமைச்சரவையில் இடம்பெற்றுவிட்டோம் என்ற ஒரே காரணத்தினாலேயே, நாங்கள் தவெக-வுடன் முழுமையாகக் கூட்டணியில் சேர்ந்துவிட்டோம் என்று யாரும் தப்புக் கணக்கு போட வேண்டாம்” என எச்சரித்துள்ளார்.
நாங்கள் இன்னும் அதிகாரப்பூர்வ கூட்டணியை உருவாக்கவில்லை என்றும், சூழ்நிலை மாறினால் எந்த நேரத்திலும் நாங்கள் மந்திரி பதவியைத் தூக்கிப்போட்டுவிட்டு அமைச்சரவையில் இருந்து கூட வெளியே வரலாம் என்றும், அப்படி ஒரு தனித்த நிலைப்பாட்டை எடுக்கும் துணிச்சல் விசிக-வுக்கு எப்போதும் இருக்கிறது என்றும் ஆவேசமாகப் பேசியுள்ளார். திருமாவளவனின் இந்த அதிரடிப் பேச்சு தவெக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி, சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.
