பாஜக கூட்டணியில் கட்சிகளை இணைக்க அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் இரவு பகலாக உழைத்து வருவதாக விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகரில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி தேர்தல் வரும் நேரங்களில் மட்டும் தமிழகத்திற்கு வருகை தருகிறார். ஆனால், கடந்த 2019-ஆம் ஆண்டு அவரால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடையவே இன்னும் 2 மாதங்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவே மத்திய அரசின் செயல்பாட்டிற்குச் சான்று.
அமலாக்கத்துறை (ED) மற்றும் வருமான வரித்துறை (IT) ஆகியவை தீவிரமாகச் செயல்பட்டு, டி.டி.வி. தினகரன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளன. தமிழக வெற்றி் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியலில் நடிகர் விஜய்யை ஏற்பது குறித்து மக்கள்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பான எங்களது கருத்துகளை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் தமிழகப் பொறுப்பாளர்களிடம் தெளிவாக எடுத்துரைத்துவிட்டோம். இது குறித்துத் தலைவர்கள் எடுக்கும் முடிவை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வோம். தலைமை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அதேசமயம், தலைவர்களிடம் ஆலோசித்தது குறித்துப் பொதுவெளியில் கருத்து கூற இயலாது.
தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி சார்பில் குரல் எழுப்பப்படும்.இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
