தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளதாகவும், இயற்கையே தங்களுக்குச் சாதகமாக இருப்பதாகவும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த மேடையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்

இக்கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

“இன்றைய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். இன்று காலை முதலே சூரியன் எட்டிப்பார்க்கவே இல்லை; காணாமல் போய்விட்டது. இதிலிருந்து இயற்கையே தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

பிரதமர் மோடி குறிப்பிட்டது போல, வரும் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக இல்லாத ஒரு தமிழகத்தை நிச்சயம் உருவாக்குவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்கனவே பலமாகத்தான் இருக்கிறது. வரும் நாட்களில் இன்னும் சில கட்சிகள் இணைந்தால் அது கூடுதல் பலமாக அமையும்” என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்ற இந்த நிகழ்வு, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.