தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பாஜக தலைமையிலான மத்திய அரசை வெளிப்படையாக எதிர்க்கத் தயங்குவதாகவும், அவர் அச்சத்தில் இருப்பதாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் குறித்துக் கூறியதாவது:
‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டில் அரசியல் தலையீடு இருப்பதாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒருவேளை இதில் பாஜகவின் தலையீடு இருக்குமானால், விஜய் அதனை வெளிப்படையாகப் பேச வேண்டும். ஆனால், அவர் மௌனம் காத்து வருகிறார். அவரைத் தடுப்பது நீதிமன்றத் தடையா அல்லது பாஜகவின் நெருக்கடியா என்பதற்கு விஜய் மட்டுமே பதிலளிக்க முடியும்.
பாஜகவையோ அல்லது மோடி அரசையோ வெளிப்படையாக எதிர்க்க விஜய் தயாராக இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்த அச்சம் ஏன் என்பதை அவர் மக்களிடையே தெளிவுபடுத்துவது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது. விஜய்யை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
விஜய்க்கு வியூகம் வகுத்து வரும் சிலரைக் கூட பாஜக அச்சுறுத்துவதாகத் தகவல்கள் வருகின்றன. பாஜகவின் இந்த நெருக்கடிக்கு ஆளாகி, அந்தக் கூட்டணியில் விஜய் இணைந்தால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வராத கட்சிகளை பாஜக மிரட்டி வருவதை எவரும் மறுக்க முடியாது. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
