கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர். பேட்டை தாலுகாவில் நடந்த அதிர்ச்சி தரும் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திங்களன்று, மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்கள், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஒரு தனியார் பள்ளிப் பேருந்தை பாசவனஹள்ளி-வட்டாரஹள்ளி சாலையில் தடுத்து நிறுத்தி ரகளை செய்தனர். அவர்கள் பேருந்து ஓட்டுநரை மிரட்டி, ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரை கட்டாயப்படுத்தி பேருந்தில் இருந்து இறங்கச் சொன்னார்கள்.
இந்தச் சம்பவம் பேருந்தில் இருந்த மற்ற மாணவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. ஓட்டுநர் எடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்டியா மாவட்ட போலீஸார், கிக்கேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களான கிரிஷ் (20), கிரண் (20) ஆகியோர் கஞ்சா போதையில் இருந்ததாகவும், ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், பள்ளி ஊழியர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
Two youths was arrested for allegedly stopping a school bus and trying to get off a Class IX girl student from the vehicle in #Mandya's #KRPet taluk on Monday.
A group of troublemakers, allegedly under the influence of narcotic substances, stopped a private school bus from… https://t.co/jlSq6YSLs7 pic.twitter.com/4l1w7Khkm6
— Hate Detector 🔍 (@HateDetectors) December 9, 2025
பள்ளி நிர்வாகத்தின் புகாரின் பேரில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக மட்டுமின்றி, POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். கிராமப்புற வழித்தடங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
