விதிமீறி அதிக விலைக்கு உணவு விற்றதைக் தட்டிக்கேட்ட நபரை, தாபா ஊழியர்கள் கொடூரமாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவண்டி பகுதியில் உள்ள ஒரு தாபாவிற்குச் சென்ற நபர், அங்கு உணவுகளின் விலை அளவுக்கு அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த உணவக ஊழியர்கள் மற்றும் உரிமையாளர், அந்த நபருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

“>

இந்த விவகாரம் காவல்துறை கவனத்திற்குச் சென்றதை அடுத்து, பிவண்டி போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வைரல் வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நுகர்வோர் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியைத் தட்டிக்கேட்கும் போது, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற அராஜகச் செயல்களில் ஈடுபடும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.