இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தங்கியிருந்த ஹோட்டலில், பாதுகாப்பு வளையத்தை மீறி பெண் ரசிகை ஒருவர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் வளாகத்தில் ரோஹித் நடந்து சென்றபோது, திடீரென பாய்ந்து வந்த அந்தப் பெண், அவரது கையைப் பிடித்து இழுத்து செல்ஃபி எடுக்க முயன்றார்.

இந்த எதிர்பாராத செயலால் நிலைதடுமாறிய ரோஹித் சர்மா, ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார். “தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்பது போன்ற ஒரு திகைப்பான உணர்வு அவரது முகத்தில் தெரிந்த நிலையில், உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அந்தப் பெண்ணை அப்புறப்படுத்தினர்.

“>

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நட்சத்திர வீரர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளன. ரசிகர்கள் தங்கள் அபிமான வீரர்களைக் காண ஆர்வம் காட்டுவது இயல்பானது என்றாலும், ஹோட்டல் போன்ற தனிப்பட்ட இடங்களிலும் இது போன்ற அத்துமீறல்கள் நிகழ்வது வீரர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக மைதானத்திற்குள்ளும், பொது இடங்களிலும் பாதுகாப்பு விதிகளை மீறி ரசிகர்கள் வீரர்களை நெருங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பிசிசிஐ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.