பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடி அவருக்கு ஈத் மற்றும் நவ்ரோஸ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் குறித்து விவாதித்த பிரதமர், உலகளாவிய விநியோகச் சங்கிலி மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

கப்பல் போக்குவரத்து சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், ஈரானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக அந்நாடு அளித்து வரும் ஆதரவிற்குத் தனது நன்றியினையும் தெரிவித்தார்.

இதேபோல், பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலீஃபாவுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, போர்ச் சூழலால் உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இரு தலைவர்களும் கவலை தெரிவித்தனர்.

பிப்ரவரி இறுதியில் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, மோடி உலகத் தலைவர்களுடன் மேற்கொண்டு வரும் தொடர் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபியா, இஸ்ரேல், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களுடன் பேசி வரும் பிரதமர் மோடி, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட இந்தியா தொடர்ந்து முயன்று வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.