ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த ஒத்துழைக்காத நாடுகளில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறப்போவதாக அமெரிக்கா அதிரடியாக எச்சரித்துள்ளது. 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் 750-க்கும் அதிகமான தளங்களை வைத்துள்ள அமெரிக்கா, குறிப்பாக ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் போருக்கு உதவ மறுப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
“அவசர காலத்தில் உதவாத நாடுகளில் ராணுவத் தளங்களை வைத்திருப்பதில் என்ன பயன்?” என்று செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய கிழக்கில் உள்ள 20-க்கும் மேற்பட்ட தளங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தங்களையும் ஈரான் தாக்கும் என்ற அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள் இந்த விவகாரத்தில் ஒதுங்கியிருக்கின்றன.
மற்றொருபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேட்டோ நாடுகளை “கோழைகள்” என்று மிகக்கடுமையாகச் சாடியுள்ளார். அமெரிக்கா இல்லையென்றால் நேட்டோ ஒரு காகிதப் புலி என்று விமர்சித்துள்ள அவர், எண்ணெய் விலையேற்றம் குறித்துப் புகார் கூறும் நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க உதவ முன்வரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அணு ஆயுதம் ஏந்திய ஈரானைக் கட்டுப்படுத்தும் இந்த முக்கியமான போரில் ஒத்துழைக்காத நாடுகளின் போக்கை அமெரிக்கா ஒருபோதும் மறக்காது என்றும், இதற்கான விளைவுகளை அந்த நாடுகள் சந்திக்க நேரிடும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
