கரூரில் நடைபெற்ற நடிகர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலால் உயிரிழந்தோர், பாதிக்கப்பட்டோர் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் மீது இன்று மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணை நடைபெற்றது. மொத்தமாக 7 பொதுநல மனுக்கள் விசாரணைக்கு வந்தன. இதில் முக்கியமாக, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கக் கோரிய மனுக்கள், சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள், இழப்பீடு வழங்கக் கோரிய மனுக்கள் ஆகியவை அடங்கும்.

கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறை கோரிய மனுக்கள்:

விசாரணையின் போது நீதிபதிகள் அரசு மற்றும் தவெகா தரப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில், “மாநில நெடுஞ்சாலையில் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது?” “விஜய் பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி அளித்த கடிதம் எங்கே?” “குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதா?” “போலீசார் அவற்றை கண்காணித்தார்களா?”
எனக் கேட்டனர்.

இதற்கு அரசு தரப்பில் பதில் வழங்கியபோது  “அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் கூட்டம் நடைபெற்றது. தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ச்சி நடக்கவில்லை. வடக்கு பக்கம் உள்ள இடத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது,” என தெரிவித்தது.

இதனை தொடர்ந்து நீதிபதிகள்,

“பொதுக்கூட்டங்களில் குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் கட்டாயம் செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் நலனே முதன்மை. இதற்கான வழிகாட்டு நெறிமுறை குறித்து சென்னை அமர்வில் வழக்கு நிலுவையில் உள்ளது. இம்மனுக்களை அதனுடன் இணைத்து இடையீட்டு மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்,” என உத்தரவிட்டனர்.

சிபிஐ விசாரணை கோரிய வழக்கு:

கரூர் நிகழ்வு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதும் விசாரணை நடந்தது. அதில் நீதிபதிகள், “மனுதாரர் நேரடியாக பாதிக்கப்பட்டவரா? போலீஸ் விசாரணையில் ஏதேனும் குறை உள்ளதா? வழக்கு இப்போது முதற்கட்ட நிலைமையில் உள்ளது. இதை அரசியல் மேடையாக்க வேண்டாம்,” என கடுமையாக எச்சரித்து, அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இழப்பீடு கோரிய வழக்கு: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர், காயமடைந்தோருக்கான இழப்பீடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள்,  “பாதிக்கப்பட்டோர் நேரடியாக மனுவாக தாக்கல் செய்யலாம். 2 வாரங்களில் விஜய் மற்றும் அரசுத் தரப்பினர் பதிலளிக்க வேண்டும்,” என உத்தரவிட்டனர்.