உடலையும் ஆரோக்கியத்தையும் பேணிப் பாதுகாப்பதற்காக நாள்தோறும் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லும் எண்ணற்ற ஆண்களுக்கு மத்தியில், அதிர்ச்சியளிக்கும் சில சுகாதாரமற்ற பழக்கவழக்கங்கள் நிலவி வருவதை ரெடிட் தள பயனர்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
உடலை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் கனரக உபகரணங்களைப் பயன்படுத்தும் பல ஆண்கள், அடிப்படைச் சுகாதாரமான கை கழுவும் பழக்கத்தைக் கூடப் பின்பற்றுவதில்லை என்ற உண்மை தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
உடற்பயிற்சிக் கூடங்களில் பயிற்சி செய்யும் ஆண்களில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தினர் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகோ அல்லது தீவிரப் பயிற்சிக்குப் பிறகோ தங்களது கைகளைக் கழுவுவதே இல்லை என்ற தகவல் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உடற்பயிற்சிக் கூடங்களில் உள்ள டம்பல்ஸ், பார் பெல்ஸ் மற்றும் பல்வேறு இயந்திரங்களை நூற்றுக்கணக்கான மனிதர்கள் ஒரே நாளில் தொட்டுப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய சூழலில், கழிப்பறை சென்று வந்த பிறகும் கைகளைக் கழுவாமல் அதே உபகரணங்களை மீண்டும் தொட்டுப் பயிற்சி செய்வது, கண்ணுக்குத் தெரியாத பல கோடி நச்சு பாக்டீரியாக்களையும் கிருமிகளையும் மற்றவர்களுக்கும் பரப்பும் அபாயத்தை உருவாக்குகிறது.
மேலும் வியர்வை வழிந்தோடும் உடலோடு, சுகாதாரமற்ற கைகளுடன் உபகரணங்களைப் பகிர்ந்துகொள்வது தோற் தொற்றுகள், வயிற்று உபாதைகள் மற்றும் பல்வேறு தொற்றுநோய்கள் எளிதில் பரவுவதற்கு முதன்மைவழியாக அமைந்துவிடுகிறது என்று உடற்பயிற்சி ஆர்வலர்கள் தங்களது வேதனையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
உடற்பயிற்சி கூடத்தின் ‘அசிங்கமான இன்னொரு பக்கத்தை’ வெளிப்படுத்தும் இந்த உரையாடல், உடலைக்கட்டமைப்பதை விடத் தனிமனிதச் சுகாதாரம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்துகிறது. வெறும் சிக்ஸ் பேக் உடலமைப்போ அல்லது பெரிய தசைகளோ மட்டும் ஒருவனை ஆரோக்கியமான மனிதனாக மாற்றிவிடாது, அடிப்படைச் சுகாதாரத்தைப் பேணுவதே உண்மையான ஆரோக்கியத்தின் அடையாளம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இந்நிலையில் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்பவர்கள் அனைவரும் பயிற்சிக்கு முன்னும் பின்னும், முக்கியமாகக் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கிருமிநாசினி அல்லது சோப் போட்டு கைகளைக் கழுவுவதை ஒரு வழக்கமாக மாற்றிக் கொள்வது அவசியமாகும்.
