தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் திமுக அரசு மற்றும் காவல்துறை மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
குறிப்பாக நடிகர் விஜயின் பொதுக்கூட்டங்களில் அதிக அளவு கூட்டம் வரும் என்றே தெரிந்தும் போலீசார் கவனக்குறைவாக இருந்தது ஏன் எனவும் மின்வெட்டு மற்றும் செருப்பு வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது தொடர்பாகவும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பிய நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த விவகாரத்தில் பதட்டப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக விமர்சித்து இருந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பேசிய நிலையில் ஏற்கனவே சமூக வலைதளங்களில் அந்த கட்சியின் ஆதரவாளர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வந்த நிலையில் தர்மபுரியில் பரப்புரை கூட்டத்திற்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி வைத்த பேனர் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலானது. அந்தப் புகைப்படத்தில் விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படங்கள் இருந்தது. மேலும் சமூக வலைதளத்தில் இந்த பேனர் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதனை அகற்றியுள்ளனர்.
