கரூர் துயரச் சம்பவத்தை அடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மொத்தம் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் இன்று (அக்டோபர் 3) விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு மனுவாக நீதிபதிகள் ஆராய்ந்தனர்.
கூட்ட நெரிசலுக்கு விதிமுறைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை பரிசீலித்த நீதிபதிகள், அரசாங்கம் பொதுமக்கள் நலனை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், நெடுஞ்சாலைகளில் எந்த வகையிலும் அரசியல் கூட்டங்கள் நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் தெளிவாக தெரிவித்தது. கட்சிகளை கடந்து பொதுமக்களின் உயிர் பாதுகாப்பில் அரசு அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
