மணிப்பூரில் வரவிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கு முன்பாக, தேசிய குடிமக்கள் பதிவேட்டை  உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. ‘நியாயமான மற்றும் நேர்மையான தொகுதி மறுவரையறைக்கான இயக்கம்’  என்ற அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாநிலத்தின் பல முக்கியப் பகுதிகளில் தீப்பந்தப் பேரணிகள் நடத்தப்பட்டன.

துணை ஆணையர் அலுவலகங்களை நோக்கிப் பேரணியாகச் செல்லுமாறு பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கு ஜே.எஃப்.டி அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதன் பேரில் யூரிபோக், கோங்பா மற்றும் குரை உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் திரண்ட போராட்டக்காரர்கள், எச்.ஆர்.சி புதுப்பிக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்படும் வரை மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளை அனுமதிக்க மாட்டோம் எனத் தீவிரமாக முழக்கமிட்டனர்.

ஏற்கனவே கடந்த மார்ச் 11 அன்று இம்பாலில் உள்ள இமா சந்தையில் நடந்த போராட்டத்தின் போது, கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதில் ஐந்து பேர் காயமடைந்தனர். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் மீரா பைபி போன்ற மகளிர் அமைப்புகள் மற்றும் பல சிவில் சமூக அமைப்புகளை ஒன்றிணைத்து இந்தப் புதிய போராட்ட அலை மாநிலம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது.

1951-ஆம் ஆண்டை எல்லை ஆண்டாகக் கொண்டு, சட்டவிரோதக் குடியேறிகளை முறையாக அடையாளம் காணும் வரை இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று ஜே.எஃப்.டி அமைப்பின் உதவிச் செயலாளர் நௌரெம் வாங்கம்பா வலியுறுத்தினார். சட்டவிரோதக் குடியேறிகளைப் பிரிக்காமல் கணக்கெடுப்பு நடத்தினால், அவர்கள் சட்டப்பூர்வ இந்தியக் குடிமக்களாகி விடுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சரிடம் ஏற்கனவே மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் புதுப்பிக்கும் வரை போராட்டம் தொடரும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.