கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி த.வெ.கதலைவர் விஜய் நடத்திய பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தார்கள். இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கரூர் டவுன் போலீசார், த.வெ.க. கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் (49), பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த 29-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல்குமாரை கைது செய்ய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் நிகழ்வுக்கு முந்தைய நாள் நாமக்கலில் நடைபெற்ற விஜய் பரப்புரை கூட்டத்திலும் நெரிசல் ஏற்பட்டதாக நாமக்கல் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதில், புஸ்சி ஆனந்த், மாவட்டச் செயலாளர் சதிஷ் உள்ளிட்டோர் பெயர்கள் எப்.ஐ.ஆரில் (FIR) சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், சதீஷ் மீது ஏற்கனவே பரப்புரை நிகழ்ச்சிக்கான மருத்துவமனை தாக்குதல் சம்பவத்தில் 8 வழக்குகள் பதியப்பட்டிருந்தன.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பொதுநல வழக்குகள் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் இன்று (அக். 3) சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தன. விசாரணையின் போது, நீதிபதிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். “தவெகவினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கட்சி நிர்வாகிகள் எதுவும் தெரியாது எனக் கூறுகின்றனர். கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா?” எனக் கடுமையாக கேள்வியெழுப்பினர். இதையடுத்து, நாமக்கல் மாவட்ட தவெகச் செயலாளர் சதீஷ்குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
