தமிழக சட்டசபையில் நேற்று கரூர் சம்பவம் தொடர்பாக விவாதம் எழுந்தது. இதில் பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, “த.வெ.க. தலைவர் பங்கேற்ற கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும், ரவுடிகள் புகுந்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன. குறிப்பாக அவர் பாடும் நேரத்தில்தான் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதுகுறித்து அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்,” என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: “செருப்பு வீச்சு சம்பவம் குறித்து நானும் டி.வி.யில் பார்த்தேன். இது திட்டமிட்டு செய்யப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. அங்கு தண்ணீர் தேவையைப் பற்றிய கோரிக்கைக்காக கவனத்தை திருப்பவே அந்தச் செயல் நடந்திருக்கலாம் என்று கருதுகிறேன். எது எப்படி இருந்தாலும், நீங்கள் கூறியபடி இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடைபெறுகிறது. அதில் உண்மைகள் அனைத்தும் வெளிவரும்.

இப்போது இதைப்பற்றி பேசிக் கொண்டு விவாதத்தை திசை திருப்ப வேண்டாம்,” என முதல்வர் தெரிவித்தார். இதையடுத்து, கரூர் சம்பவம் தொடர்பாக வெளிநடப்பு செய்ய இருப்பதாக நயினார் நாகேந்திரன் அறிவித்தார். பின்னர் பா.ஜனதா உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக நேற்று அதிமுக மற்றும் திமுக இடையே விவாதம் நடைபெற்ற நிலையில் அதிமுக உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.