தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையனுடன் நேற்று (டிசம்பர் 20, சனிக்கிழமை) சுமார் 3 மணி நேரம் மிக முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், கட்சியின் அடுத்தகட்டப் பிரச்சாரப் பயணம், தேர்தல் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைக் குழுக்கள் மற்றும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு குறித்துத் தீவிரமாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஈரோடு மக்கள் சந்திப்புப் பயணத்தின் வெற்றிக்குப் பிறகு, அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய மாவட்டச் சுற்றுப்பயணங்களுக்கு ஜெயலலிதா பாணியில் திட்டமிடுமாறு செங்கோட்டையனிடம் விஜய் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.

இந்தச் சந்திப்பின்போது கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்கவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நிர்வாக ரீதியான முடிவுகளை எடுப்பதிலும், மூத்த அரசியல் தலைவர்களைக் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அணுகுவதிலும் 50 ஆண்டுகால அனுபவம் கொண்ட செங்கோட்டையனுக்கே விஜய் முன்னுரிமை அளித்து வருவதாகத் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஜனவரி மாதத்திற்குள் கூட்டணி குறித்த முதற்கட்ட முடிவுகளை எட்டத் தவெக தலைமை திட்டமிட்டுள்ள நிலையில், செங்கோட்டையன் தலைமையிலான இந்தக் குழுவின் செயல்பாடுகள் கட்சியின் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.