திமுகவை விமர்சனம் செய்யாமல் தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது என்ற ஒரு சூழல் நிலவுவதாக முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவையில் நேற்று (டிசம்பர் 20, சனிக்கிழமை) நடைபெற்ற திமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதியதாகத் தொடங்கப்பட்ட கட்சிகள் முதல் பழைய கட்சிகள் வரை அனைத்தும் தங்களைத் தக்கவைத்துக்கொள்ளத் திமுகவை விமர்சிப்பதையே அத்தியாவசியமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். குறிப்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், அரசியல் களத்தில் வளர வேண்டும் என்பதற்காகவே பலரும் ஆளுங்கட்சியைத் தாக்கிப் பேசி வருவதாகச் சுட்டிக்காட்டினார்.

கோவை சட்டசபைத் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாகப் பரவி வரும் தகவல்கள் குறித்துப் பதிலளித்த செந்தில் பாலாஜி, “சமூக வலைதளங்களில் யாரோ ஒருவர் பேசுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை; நான் கோவையில் போட்டியிடப்போவதாக வரும் செய்திகள் வெறும் வதந்திகளே” என்று முற்றுப்புள்ளி வைத்தார்.

கரூர் மக்கள் தனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பதே தங்களின் முதல் மற்றும் முக்கிய இலக்கு என்று தெரிவித்த அவர், இதற்காகத் தொண்டர்கள் இப்போதே தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.