திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டையில், இன்று (ஜூன் 11) கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது அதிவேகமாக மோதி தலைகீழாகக் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன், ரஷீத், ராஜமுரளி உட்பட 3 பள்ளி மாணவர்கள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் 2 மாணவர்கள் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதே போன்று உளுந்தூர்பேட்டை மேட்டூர் பகுதியில் நெடுஞ்சாலையில் ஒரே பைக்கில் ஐந்து பள்ளி மாணவர்கள் சென்ற நிலையில் திரும்பும் போது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில் இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பள்ளி மாணவர்களும் செரத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
