தமிழ்நாடு மாநிலங்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் அதிகாரி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்று (ஜூன் 11) மதியம் 3 மணியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் அண்மையில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், தனது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் ஏற்பட்ட காலி இடத்திற்கு அறிவிக்கப்பட்ட இந்த இடைத்தேர்தலில், ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் முழு ஆதரவுடன் இந்த இடம் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தியுடன் சேர்த்து மொத்தம் 14 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இருப்பினும், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சம் 10 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற முக்கிய விதிமுறை உள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் யாருக்கும் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இல்லாததால், கடந்த ஜூன் 9 அன்று நடைபெற்ற மனு பரிசீலனையின் போது அவர்களின் 14 வேட்புமனுக்களும் அதிரடியாக நிராகரிக்கப்பட்டன.

இதன் காரணமாக, தேர்தல் களத்தில் தகுதியான ஒரே வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி மட்டுமே எஞ்சியிருந்ததால், அவர் போட்டியின்றி எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை தேர்தல் அதிகாரி அவரிடம் வழங்கினார்.