மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காகப் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். சென்னை ஆழ்வார்ப்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு கமல்ஹாசன் நேற்று காலை வந்தார். அவருடன் அவரது மகள் ஸ்ருதிஹாசனும் வந்திருந்தார். விஐபி (VIP) வரிசையைப் பயன்படுத்தாமல், சாதாரண பொதுமக்களோடு வரிசையில் நின்று சுமார் அரை மணி நேரம் காத்திருந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.
வாக்களித்துவிட்டு வெளியே வந்த அவர், மை வைக்கப்பட்ட தனது விரலைக் காட்டி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, என்னுடைய ஜனநாயகக் கடமையைச் சரியாகச் செய்துவிட்டு வருகிறேன். ஒவ்வொரு குடிமகனும் தங்களது வாக்கைப் பதிவு செய்வது மிக அவசியம் என்றார்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள், “இந்தத் தேர்தல் மூலம் மாற்றம் வருமா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், “மாற்றம் என்பது வந்து கொண்டே இருக்கும்” என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள், “நீங்கள் சொல்வது ஆட்சி மாற்றத்தையா?” என்று அடுத்த கேள்வியைத் தொடுத்தனர். அதற்குத் தனது பாணியில் சுருக்கமாகவும், ஆழமாகவும் பதிலளித்த கமல், “ஆட்சி மாற்றம் என்பதை விட, உங்கள் வாழ்க்கை மாறும்” என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
மேலும் முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கஞ்சா புழக்கம் போன்றவைகள் அதிகரித்துள்ளதாகவும் இதைத்தவிர ஸ்டாலின் மீது வேறு என்ன குறைகளை நீங்கள் சொல்ல முடியும் என்றும் பொது மேடையில் கூறிய நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் ஆட்சி மாற்றம் வரும் என்று கூறியுள்ளது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
