சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சிக்குச் சாதகமான சூழல் நிலவுவதாகவும், குறிப்பாக மேற்கு வங்கத்தில் முதல்முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைப்பது 100 சதவீதம் உறுதி என்றும் அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களின் அரசியல் களம் மாறுபட்டது. இருப்பினும், அசாம் மற்றும் புதுச்சேரியில் பா.ஜ.க. தலைமையிலான அரசு மீண்டும் அமைவதில் எந்த சந்தேகமும் இல்லை. மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரை, அங்கு ஆச்சரியமளிக்கும் முடிவுகள் வரப்போகின்றன. மக்களின் மனநிலையைப் பார்த்தால், பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் முதல்முறையாக அங்கு ஆட்சி அமைப்பது உறுதி. எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை இப்போதே கூற முடியாது என்றாலும், ஆட்சி அமைப்பதற்கான தெளிவான நிலை உருவாகும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெறும். அங்கு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இடம்பெற்றுள்ளோம். தி.மு.க. அரசின் ஊழல், அராஜகம் மற்றும் சனாதன எதிர்ப்புப் போக்கு ஆகியவற்றிற்கு எதிராக மக்களிடம் கடும் அதிருப்தி நிலவுகிறது. தமிழகத்தில் நான் பிரசாரம் செய்த அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது, தி.மு.க.வுக்கு இந்தத் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்பது உறுதியாகத் தெரிகிறது.
நடிகர் விஜய் அரசியலுக்குப் புதிதாக வந்துள்ளார். பொதுவாக அரசியலில் ஒருவர் நுழைந்தவுடன் உடனடியாகப் பெரிய தாக்கத்தை உருவாக்கிவிட முடியாது. தமிழகத்தில் எங்களது கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. எனவே, தேர்தலுக்குப் பிறகு விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு எழாது. கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் போட்டியிட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுத் தனித்தே ஆட்சி அமைக்கும் நிலையை எட்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
